லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வருகிற அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்திருக்கிறார். பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அமிதாப் பச்சனுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
வேட்டையன் படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். ஜெய்பீம் வெற்றி படத்தை தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியார், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி, ராணா டகுபதி, பகப் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
வேட்டையன் படம் குறித்து அந்த படத்தில் பணி புரிந்த கலை இயக்குனர் கதிர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இடைவேளை காட்சி இருக்கும்.
அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி ரொம்பவும் மாஸ் ஆக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்தக் காட்சி மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் தனது ஸ்டைலில் வேகம் காட்டி ரஜினி நடித்திருக்கிறார்.
வேட்டையன் படத்தின் கிளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் படத்தில் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் வேட்டையன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கலை இயக்குனர் கதிர் தெரிவித்துள்ளார்.





