சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ். இவரும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். பிறகு சிவகார்த்திகேயன் மூலம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக இணைந்தார். சிம்புவை வைத்து நெல்சன் ஆரம்பித்த வேட்டை மன்னன் படம் பாதியில் ட்ராப் ஆக பிறகு நடிகராக அவதரித்தார் அருண்ராஜா காமராஜ்.
ராஜாராணி திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. நடிகராக மட்டுமின்றி ரஜினி, விஜய் உள்ளிட்டோருக்கு பாடல்களையும் எழுதியிருக்கிறார். முக்கியமாக கபாலி படத்தில் நெருப்புடா நெருங்குடா பாடலின் மூலம் கவனிக்கப்படும் பாடலாசிரியராக மாறினார். ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநராகவும் அறிமுகமானார்.
முதல் படமாக ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கனா படத்தை இயக்கினார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்து முதல் படத்திலேயே சிக்சர் அடித்தார் அருண்ராஜா. படத்தில் சிவகார்த்திகேயனும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். படம் மெகா ஹிட்டடிக்க அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கினார்.
இந்நிலையில் அவர் தற்போது ஜெய்யை வைத்து லேபில் வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இந்த வெப் சீரிஸ் குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அருண்ராஜா காமராஜ், “லேபில் என்னுடைய மூன்றாவது படைப்பு. ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டுவருகிறேன். இதில் என்னை லேசாக வைத்துக்கொண்டவர் கேமராமேன் தினேஷ். அவர் எனக்காகவும் சேர்த்து உழைத்தார்.
இந்த சீரிஸில் வேலைப்பார்த்த அனைவருமே என்னை ரொம்பவே நம்பினார்கள். அனைவருமே சினிமாவில் சாதித்தவர்கள். அவர்கள் தரும் உழைப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்த சீரிஸ் நன்றாக உருவாவதற்கு முக்கிய காரணம் என்னுடைய டைரக்ஷன் டீம்தான். என்னை அவர்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
ஜெய் இந்தப் படைப்பின் மூலம் எனக்கு நண்பராகியிருக்கிறார். இதற்கு முன்பு வேட்டை மன்னனில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போது அவர் அந்தப் படத்தில் நடிகராக இருந்தார். இப்போது அவரை இயக்கும்போது எனக்காக கூடுதலாக உழைத்தார். எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி இந்த வெப் சீரிஸை உங்களுக்காக உருவாக்கியிருக்கிறோம். உங்களது கைத்தட்டல்களில்தான் எங்களது மகிழ்ச்சி இருக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார் உருக்கமாக.





