புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்த போதும் வாழ்த்துகளுக்கு உரிய மனிதராக வாழ்ந்தார். மறைந்த பிறகும் அவரது புகழ் இன்றும் போற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அவர் எப்போதுமே மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தார். எதை செய்தாலும் அதில் அன்பும், உதவியுமே அவரது நோக்கமாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற பாகுபாடு இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்ற கொள்கையை முதலில் கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். தயாரிப்பாளர் அதை கூடுதல் செலவாக கருதினால், என் சம்பளத்தில் குறைத்துக்கொள்ளுங்கள் என்றார் எம்ஜிஆர்.
அதேவழியில்தான் கேப்டன் விஜயகாந்தும் பயணித்தார். அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று அனைவருக்குமே அசைவ சாப்பாடுதான் வழங்க வேண்டும் என்று தனது தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார். சிக்கன், மட்டன், மீன், முட்டை, காடை, கவுதாரி, நண்டு என விஜயகாந்த் ஷூட்டி தளமே மணக்கும்.
இதற்கு அதிக செலவு ஏற்படுமானால், தயாரிப்பாளர் நஷ்டப்படுவார் என தெரிந்தால் அந்த செலவை என் சம்பளத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். மொத்த ஷூட்டிங் சாப்பாடு செலவில் 2 கோடி, 3 கோடி ரூபாய், என் சம்பளத்தில் குறைத்து கொள்ளுங்கள் என படத்தின் தயாரிப்பாளரிடம் முன்பே சொல்லி விடுவதும் கேப்டனின் வழக்கம். அதனால்தான் அவரை கருப்பு எம்ஜிஆர் என்றனர்.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜயகுமார் மகன் அருண் விஜயை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சற்று உணர்ச்சிவசப்பட்ட அருண் விஜய், இனி நான் நடிக்கும் படங்களில் அனைவருக்கும் ஒரே விதமான உணவை வழங்க வைப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.
விஜயகாந்த் அப்படி செய்தார் என்பதற்காக அருண் விஜய் இப்படி கூறுகிறாரே, இவருக்கு படவாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி தயாரிப்பாளருக்கு செலவு வைக்கிற விதமான இவர் கண்டிசன் போட்டால், இவரை தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர் வேறு ஹீரோவை தேடிப் போய்விடுவார் என்று தெரியாதா, அல்லது இவரது சம்பளத்தில் தான் விஜயகாந்த் மாதிரி, கோடிக்கணக்கில் குறைத்துக் கொள்வாரா, மைக் கிடைத்தால் என்ன வேணும்னாலும் பேசலாமா, யோசிச்சு பேசணும் அப்பு, என்று பலரும் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.





