லோகேஷ் கனகராஜ் படங்களை பொருத்த வரை, மாநகரம் துவங்கி லியோ வரை ஆக்சன் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சண்டை, துப்பாக்கி, வன்முறை, வெடிச்சத்தம், வெடிகுண்டு என்ற விஷயங்கள் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் படம் எடுத்தால், அது உலக அதிசயத்தின் எட்டாவது அதிசயமாக ரசிகர்கள் பார்க்கலாம்.
56 இரவுகளில் மட்டுமே படமாக்கப்பட்ட கைதி படத்தில், சண்டை காட்சிகளே பிரதானமாக இருக்கும். போதையில் மயங்கி கிடக்கும் போலீசாரை லாரியில் காப்பாற்றிக் கொண்டு செல்லும் கார்த்தியை தொடர்ந்து வரும் ரவுடி கும்பல், சண்டையே இந்த படத்தில் பிரதானமாக இருந்தது. இறுதியில், பல ரவுண்டுகள் சுடும் பெரிய ரக துப்பாக்கி தான், விக்ரம் படத்தில், கமல் இறுதி காட்சியில் பீரங்கியாக மாறி, வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டியது.
விக்ரம் படத்தில், ஏஜன்ட் வசந்தா கேரக்டரில் வேலைக்கார பெண், சண்டை காட்சி இப்போது பார்த்தாலும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கும் சண்டை காட்சியாக அமைந்தது. மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதி கையால் குத்தியே பலரை கொல்வது போன்ற காட்சிகள், விக்ரம் படத்திலும் போதை தரும் வேகத்தில் பலரை அடித்துக் கொல்வதாக காட்டப்பட்டு இருந்தது.
அதே போல் இப்போது வெளிவந்துள்ள லியோ படத்திலும், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு சண்டை காட்சிகளை அமைத்துள்ள விதம், ஆக்சன் பட பிரியர்களை நிச்சயம் உற்சாகப்படுத்துகிறது. சண்டை காட்சிகளை பார்த்து மட்டுமே குஷி அடையும் ரசிகர்களுக்கு லியோ படம், சர்க்கரை பொங்கல் போல இனிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கைதி படத்தில் பாடல் காட்சிகளோ, கதாநாயகியோ இல்லாமல் படம் எடுத்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தில் திரிஷா கருவேப்பிலை போலவே பயன்படுத்தியதாக ரசிகர்கள் கருதுகின்றனர். கதாநாயகிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்பதே உண்மை. அதை விட, படத்தில் காமெடிக்கு பஞ்சமோ பஞ்சம். ஒரு காட்சியில் கூட ரசிகர்கள் சிரிக்க வாய்ப்பே இல்லை என்னும் அளவுக்கு படம் இருப்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
சினிமா என்பது ஜனரஞ்சகமானது. சண்டை மட்டுமே, மனித வாழ்க்கையாக இருப்பதில்லை. காதல், மகிழ்ச்சி, சிரிப்பு, நட்பு, இசை என பல விதங்களிலும் குறிப்பாக சென்டிமென்ட் என சகல விஷயங்களையும் எதிர்பார்க்கும் ரசிகர்கள், லியோவுக்கு சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். குறிப்பாக டீன் ஏஜ் வயதினரை மட்டுமே குறிவைத்து, ஆக்சன் படங்களை தரும் லோகேஷ், ரஜினி 171ல் அதை சற்று மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.





