இந்த வருடத்தில் பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானுக்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம், ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.
கொரோனாவுக்கு பிறகு பாலிவுட் திரையுலகம், பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சூழலில், அதன் போக்கினை பதான் மாற்றியது. 250 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படம், 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
பிகில் திரைப்படத்திற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பைப் பெற்ற அட்லி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோரையும் இந்தி திரை உலகிற்கு அழைத்துச் சென்றார்.ஹிந்தி திரையுலகம் எதிர்பார்த்ததை போலவே ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது வரை 907 கோடி அளவுக்கு இந்த படம் வசூல் செய்திருப்பதால், விரைவில் ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை தொட்ட முதல் இயக்குனர் என்ற அந்தஸ்தை அட்லி பெறுவார்.
பாலிவுட்டில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும், தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கும் காரணம் அட்லியின் இயக்கம் தான் என பலரும் வசைபாடினர். ஒரு படம், இரண்டு படமல்ல பல்வேறு திரைப்படங்களில் இருந்து ஏராளமான காட்சிகளை அவர் சுட்டு வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது எல்லாம் கண்டுகொள்ளாத அட்லி, ஜமான் திரைப்படம் ஆஸ்கருக்கு செல்லும் என்று கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் அவர், என்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில், விஜய் ஷாருக்கான் இருவரும் ஒரு சேர நடிக்கும் வகையில் ஒரு கதையை எழுத கூறினர். அவர்கள் சும்மாதான் கூறினார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு மறுநாளே விஜய் எனக்கு மெசேஜ் செய்தார். நீ அப்படி ஒரு கதையை எழுதினால் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறினார். ஷாருக்கான் இடமிருந்தும் இதே பதில்தான் வந்தது. இதனால் அவர்களை இணைக்கும் வகையில் கதை எழுத தயாராகி விட்டேன் என்று தெரிவித்தார்.





