இந்திய சினிமாவில் இந்த ஆண்டு பொற்காலம் என்பது மலையாள சினிமாவுக்கு தான். சமீப ஆண்டுகளாகவே, அந்த திரையுலகில் இருந்து வெளிவரும் அத்தனை திரைப்படங்களையும் மொழிகளை தாண்டி கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இயல்பான கதையோட்டமும், எதார்த்தமான நடிப்பும் தான் மலையாள சினிமாவில் மற்றவர்களும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறலாம்.
கடந்த காலங்களில் இறுதி தற்போது வரை, மலையாளத் திரைப்படங்களுக்கு என தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனை நாம் பிரேமம் திரைப்படத்திலேயே பார்த்திருப்போம். முழுக்க முழுக்க மலையாள மொழியில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தை, ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
அதில் மலர் டீச்சர் ஆக நடித்திருந்த சாய் பல்லவி, தமிழ் மொழியில் பேச பிரேமம் பலருக்கும் பிரியமானது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மலையாள திரைப்படம் தமிழ் ரசிகர்கள் கொண்டாடப்பட்டது. அது கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.
கொடைக்கானலில் குணா குகை பள்ளத்தில் இளைஞர் ஒருவர் தவறி விழ, அதன் பிறகு என்ன ஆனது என்பதை தான் இந்த திரைப்படம் விவரித்திருக்கும். உண்மையில் நடைபெற்ற சம்பவம் என்பதால், இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஒட்டி போனது. மலையாளத்தை விட தமிழ் சினிமா ரசிகர்கள் இதனை தூக்கி வைத்துக் கொண்டாடியதால், 25 கோடி ரூபாய் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் குவித்தது.
இதன் பிறகு வெளியான பிரேமலு திரைப்படமும் மலையாள உலகில் சக்கை போடு போட்டது. காதல் மற்றும் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். இதன் பிறகு வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படமும் வசூல் குவித்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டின.
இப்படியான நிலையில் தற்போது இதன் பட்டியலில் ஆவேசம் திரைப்படமும் இணைந்து இருக்கிறது. குறிப்பாக, பகத் பாசில் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் ரசிகர்களும் இதனை கொண்டாட, தற்போது இந்த திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது.





