கடந்த பல மாதங்களாக, இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருப்பதாக தகவல் வந்துகொண்டே இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகையர் நடித்து வருகின்றனர். இந்த படம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடுத்து எச் வினோத் படம், அதையடுத்து மணிரத்னம் படங்களில் கமல் நடிப்பதாக இருந்தது.
ஆனால், இப்போது இதில் ஒரு புதிய டிவிஸ்ட், அதுவும் நம்பவே முடியாத ஒரு தகவல் வெளிவந்து இருக்கிறது. அதாவது இந்தியன் 3 படம், முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், இந்தியன் 2 படத்தின் ரீ ஷூட் மீண்டும் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதற்காக மேலும் சில மாதங்கள் கமல் கால்ஷீட் தந்துள்ளதும் உறுதியாகி உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் இந்தியன். தந்தை – மகன் என இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருப்பார். சுகன்யா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், லஞ்சம் ஒழிப்பை மையமாக கொண்ட படம். சுதந்திர கால போராட்ட காட்சிகளும் இடம்பெற்ற மாபெரும் ஹிட் படமாக இருந்தது.
இந்நிலையில், இந்தியன் 2 படம் அதன் தொடர்ச்சியாக மிக பிரமாண்டமாக, இன்றைய கால சூழலுக்கு ஏற்ப, ஷங்கர் வேற லெவலில் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்தியன் 2 பதிலாக, இந்தியன் 3 படத்தை எடுத்து முடித்திருக்கிறார் என்பது, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக உள்ளது. இந்தியன் 2 வை ஆரம்பித்த, இந்தியன் 3 படத்தை முடித்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் என்ன நடந்தது என்றால், இந்தியன் 2 படத்தை எடுக்க ஆரம்பித்து, அதில் இருந்து சில காட்சிகளுக்கான அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்கும்போது அது 3ம் பாகத்துக்கான விஷயங்களான அமைந்திருக்கின்றன. எனவே, அதை மூன்றாம் பாகத்துக்கு ஒதுக்கியதால், அது ஒரு முழு படமாக இந்தியன் 3 என ஆகிவிட்டது. இதனால், 2ம் பாகத்துக்கான காட்சிகள் நிறைய தேவைப்பட்டதால் அதற்காக ரீ ஷூட் எடுக்க முடிவாகி உள்ளது.
இந்தியன் 2 படத்துக்காக, கமலுக்கு துவக்கத்தில் பேசிய சம்பளம் ரூ. 30 கோடி. இப்போது மீண்டும் இந்தியன் 2 பட ரீஷூட் காட்சிகளில் நடிக்க கமல் சம்பளம் ரூ. 120 கோடி என, இரண்டு படங்களுக்கும் சேர்த்து, ரூ. 150 கோடி என்பதால், அதுவும் ஒரு விதத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபமாக இருந்துள்ளது. இதனால் எச் வினோத், மணிரத்னம் படங்களில் கமல் நடிப்பது தள்ளிப் போகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





