விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக எழும் பேச்சுக்கள் அனைத்தும் ரசிகர்கள் எப்போதோ அறிந்ததே. சமீபத்தில் கூட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு விஜய் கல்வி சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார். இந்த விழா விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

சில மாதங்களாகவே தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசுகிறார் விஜய். இதனை எல்லாம் பார்க்கும்போது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக விஜய் தன்னை தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
“விஜய் அரசியலுக்கு வந்தால் அஜித், சூர்யா ரசிகர்கள் வாக்களிப்பார்களா? இப்போதெல்லாம் சின்ன சின்ன நடிகர்கள் கூட இரண்டு படங்கள் வெற்றிபெற்றால் கோட்டைக்கு முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கனவோடுதான் இருக்கிறார்கள். வந்தோமா நடிச்சோமா ரசிகர்களை சந்தோஷப்படுத்தினோமா என்று இருக்கும் நடிகர்கள் குறைந்துப்போய்விட்டார்கள்.

நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். ஒரு தொழில் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது என்றால் அதனை திசை திருப்ப கூடாது. விஜய்க்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் விஜய் உடனடியாக அரசியலில் செயல்பட மாட்டார்.
விஜய் இப்போதைக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ரசிகர் கட்டமைப்பு வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சினிமா என்ற தோனியில் இருந்து அரசியல் என்ற தோனிக்கு தாவ மாட்டார். நிச்சயமாக விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் இப்போது இல்லை என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார்” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.





