ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான “ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. காலையில் இருந்து இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் சிறப்பாக இருப்பதாகவும் நெல்சன் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் எனவும் கூறுகின்றனர். எங்கு திரும்பினாலும் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்களே அதிகமாக வருகின்றன.

“2.0” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்திற்கு ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக “ஜெயிலர்” அமைந்துள்ளதாக தெரிய வருகிறது. 72 வயதிலும் ரஜினிகாந்தின் ஸ்டைல் கொஞ்சம் கூட மாறவே இல்லை எனவும் ரஜினிகாந்தை திரையில் பார்ப்பதற்கே மாஸ் ஆக இருக்கிறது எனவும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், தனது வீடியோ ஒன்றில் “ஜெயிலர்” திரைப்படத்தை ரிவ்யூ செய்துள்ளார். அதில் பேசிய அவர், “ரஜினிகாந்த் இந்த வயதிலும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அவரது கூர்மையான கண்கள் குத்தீட்டி போல் பாய்கிறது. பிரமாதமாக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரின் ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை அதகளப்படுத்துகிறார்” என்று கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், “வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் அவ்வளவாக ரத்தம் வராது. பெண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் கொஞ்சம் அடக்கி வாசிப்பார். அவரது திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் டீசண்டாக இருக்கும்.
ஆனால் இந்த திரைப்படத்தில் வன்மம் நிறைந்த சண்டைக் காட்சிகளாக இருக்கின்றன. ரஜினிகாந்த் வெட்டும்போது தலை தனியாக போய் விழுகிறது. அதனை பார்க்கும்போது நமக்கே பதைபதைப்பாக இருக்கிறது. அந்தளவுக்கு வன்மம் நிறைந்த காட்சிகளாக படமாக்கியிருக்கிறார் நெல்சன்” என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





