நடிகர் ரஜினிகாந்த் இப்போது 172 படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுத்து அவர் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த கூலி படம் அவரது 171வது படமாக இருந்தது. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி படமாக கூறப்பட்டது.
கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். கடந்த 1999ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா. இது அவரது 151வது படமாக இருந்தது. இந்த படத்தில் நடித்த போது ரஜினிகாந்த் சொன்ன ஒரு முக்கிய தகவலை அந்த படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலின் போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
படையப்பா படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, கர்நாடகா மாநிலம் மைசூரில் முருகன் கோவில் செட் போட்டு படையப்பா படத்தின் காட்சிகளை எடுத்தோம். கோவிலுக்குள் வருவது மாதிரியான காட்சிகளை சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்தோம்.
மத்தபடி முதல் ஷெட்யூலிலேயே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டது. மைசூரில் கோவில் பின்னணியில் ரஜினி இல்லாத காட்சிகளை ஒருநாள் நான் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ரஜினி கோவில் முன்புள்ள படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தார்.
கோவில் படிக்கட்டில் அமர்ந்தபடி ரஜினி சார் என்னிடம், இதுதான் என்னுடைய கடைசி படம் என்றார். அதற்கு நான், ஏன் அரசியலுக்கு போகப் போறீங்களா என்று விளையாட்டாக கேட்டேன். அதற்கு அவர் இந்த படம் வெள்ளி விழா கொண்டாட வேண்டும். அப்போதுதான் அடுத்த படத்தில் நடிப்பேன். அப்படி நடந்தால்தான் அடுத்த படத்தில் நடிப்பது பற்றியே யோசிப்பேன் என்றார்.
இத்தனையும் படப்பிடிப்பு குழுவினர் முன்னாலேயே நடந்தது. எனக்கே கோவில் வாசலிலில் இருந்து கொண்டு இப்படி பேசுகிறாரே என்று கவலைப்பட்டேன். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் தாண்டி படையப்பா படம் நீண்ட நாள் ஓடியது. பெரிய ரெக்கார்டு பிரேக் செய்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்திரமுகி படம் தான் படையப்பா ரெக்கார்டு பிரேக்கை முறியடித்தது என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.





