இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாலை இலங்கையில் மறைந்தார். அவரது திடீர் மறைவு இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் கவலையில் கண்ணீர் மல்க இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா, கங்கை அமரன் இருவரும் சகோதரர்கள். இவர்களது மூத்த சகோதரர் பாஸ்கர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு பண்ணைபுரத்து பாவலர் சகோதரர்கள் என்ற பெயரும் உண்டு. இளம் வயதில் பல கலைநிகழ்ச்சிகளில் இளையராஜா ட்ரூப் இசைத்து வந்திருக்கிறது.
இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி. அதே போல், கங்கை அமரனுக்கு வெங்கட்பிரபு, யுவன்சங்கர் ராஜா மகன்கள் உள்ளனர். இளையராஜா, கங்கை அமரன் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர். இளையராஜாவுடன்தான் எப்போதுமே கங்கை அமரன் உதவியாக இருப்பார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, இளையராஜா தனது தம்பி கங்கை அமரனை தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.அவர் மனைவி இறந்த போது கூட, பார்க்க வந்த கங்கை அமரனை பார்க்கக் கூடாது என தடுத்தவர் இளையராஜா என்ற தகவலும் உண்டு. ஆனால், அவர்கள் பிள்ளைகளுக்குள் சகோதரப்பாசமும், அன்பும் பிணைப்பும் நிறைய இருந்தது.
இந்நிலையில் பவதாரணி மறைந்தது இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவதாரணி மறைவு குறித்து எக்ஸ் பதிவில் நடிகர் சிம்பு, பவதாரணியின் இன்னோசென்ஸ் நிறைந்த அந்த குரல், மக்கள் மனங்களில் எப்போதுமே நிறைந்திருக்கும். இவ்வளவு சீக்கிரமாக போய்விடுவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என தனது ஆறுதலை இளையராஜா குடும்பத்துக்கு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் மாநாடு. இந்த படத்தை கங்கை அமரன் மூத்த மகன் வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். அதில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில், மெஹரசைலா என்ற பாடலை பவதாரணி பாடியிருக்கிறார். அவர் பாடிய வீடியோவை அந்த பதிவில் சிலம்பரசன் பதிவிட்டு, தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் கடைசியாக தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கத்தில் வந்த மாநாடு படத்தில் பவதாரணி பாடியிருக்கிறார்.





