நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்தாண்டில் அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ. 325 கோடி ரூபாய் வசூலித்தது. இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு பராசக்தி படம் ரிலீஸாகிறது.
இதற்கிடையே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அவரது 23வது படம் மதராஸி படம் படப்பிடிப்பில் உள்ளது. இந்த படம் இன்னும் 25 நாட்களே படப்பிடிப்பு உள்ள நிலையில், வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் வித்யுத் ஜம்வால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு விஜய் டிவியில் காம்பியராக இருந்தவர். கல்லூரி படிப்பை திருச்சியில் முடித்த பிறகு அது இது எது என்ற காமெடி ஷோவை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மாகாப அந்த நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அது இது எது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அவ்வப்போது சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து வழங்கினார். மேடைகளில் மிமிக்ரி செய்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த திறமையை அறிந்த இயக்குனர் பாண்டிராஜ் மெரினா படம் மூலம் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இன்று முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன் தொகுப்பாளராக இருந்த காலகடத்தில் தொகுப்பாளினி பாவனாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகளை வழங்கி இருக்கிறார். அதுபற்றி பாவனா கூறியதாவது, சிவகார்த்திகேயன் போராட்ட குணம் மிக்கவர். அவரது போராட்ட குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
துரோகம், வளர்ச்சியை தடுப்பது என அவருக்கு யாராவது ஏதாவது செய்தால் அதையெல்லாம் உடைத்து, பல மடங்கு வளர்ச்சி அடைந்து சாதித்து விட்டு வந்து மீண்டும் அவர்களுடன் அன்போடு இயல்பாக பழகுவார். அவர் அப்படித்தான் தனக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பார். அதுதான் அவரது போராட்ட குணம். அது எனக்கு வியப்பாக இருக்கும் என்று ஒரு நேர்காணலில் தொகுப்பாளினி பாவனா கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





