தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வயது 70களை தொட்டும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நயன்தாரா நடித்த மனசங்கர வரபிரசாத் காரு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
அவரது மகன் ராம்சரணும் பல ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்த படம் கேம் சேஞ்சர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது.
கடந்த வாரத்தில் ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 2வது பிரசவத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தைகளுக்கு ராம்சரண் – உபாசனா பெற்றோர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், தனது மகன் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த தகவல் தங்கள் குடும்பத்தையே பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக கூறியிருந்தார். இரட்டை பிள்ளைகளை, மனைவியை காண மருத்துவமனைக்கு வந்த நடிகர் ராம்சரணை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தைக் தொடர்ந்து நடிகர் ராம்சரண் நடித்த படம் பெத்தி. இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நாயகியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.
பெத்தி படத்தின் லிரிக்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் பெத்தி படம் முதலில் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு மாதம் கடந்து ஏப்ரல் 30ம் தேதி ரிலீஸாகும் என்கிற புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏன் இப்படி ஒரு மாதம் தள்ளிப் போகிறது என்பதற்கான தகவல் இல்லை.





