லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம் விடாமுயற்சி. இந்த படத்துக்கு விடாமுயற்சி என்ற டைட்டில் வைத்ததால் தான் என்னவோ, இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தொடர்ந்து விடாமுயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் படம் திரைக்கு இன்னும் வந்தபாடில்லை.
கடந்த ஆண்டிலேயே தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் என்று தகவல் பரவியது. பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் என்று அவர்களே டீசர் வெளியிட்டு அறிவித்தனர். துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து அதே பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது என்ற உற்சாகத்தில் ஏகே ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் புத்தாண்டு வாழ்த்து செய்தியாக, டிசம்பர் 31ம் தேதி அறிக்கை வெளியிட்ட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது; படத்தின் வெளியீடு தள்ளி போட்டப்பட்டிருக்கிறது என்ற பெரிய குண்டை தூக்கிப் போட்டது. இதனால் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.
இதில் மற்றொரு முக்கிய விஷயம், சித்தா, பண்ணையார் பத்மினியும் படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீரதீர சூரன் படம் பொங்கலுக்குதான் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. விடாமுயற்சி படம் வெளியாவதால், ஜனவரி மாதம் 24ம் தேதி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இப்போது விடாமுயற்சி பொங்கலுக்கு வராத நிலையில், 11 படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த சூழலில்தான் ஜனவரி 24ம் தேதிக்கு வீரதீர சூரன் படம் ரிலீசை தள்ளி வைத்தனர். ஆனால் இப்போது வருகிற 23ம் தேதி விடாமுயற்சி படம் திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு தின விழா வருவதால், வருகிற ஜனவரி 24ம் தேதி வீரதீர சூரன் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இப்படி விடாமுயற்சி படம் 23ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வந்துள்ளதால், வீரதீர சூரன் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர். இனியும் ரிலீஸை தள்ளிப் போட முடியுமா என ஆலோசித்து வருகின்றனர். இப்படி விக்ரம் நடித்த படத்துக்கு அஜீத் நடித்த படமே வில்லனாகி விட்டதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





