நடிகர் விஜய் இப்போது தி கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் விஜய் சம்பளம் ரூ. 275 கோடி என்று சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் அக்டோபரில் விஜய் 69 படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
விஜய் இந்த படத்தை தனது கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக கொடுக்க எச் வினோத் முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், மமிதா பைஜூ, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டோ ஆகிய நடிகைகளும், நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வருகிற அக்டோபர் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி சாலை என்னும் கிராமத்தில் நடத்த திட்டமிட்டு, ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க போலீஸ் அனுமதி தரப்பட்டுள்ளது.
முதலில் மதுரை, பிறகு திருச்சி ஆகிய பெரிய நகரங்களில் இந்த மாநாட்டை நடத்த விஜய் முயற்சித்த நிலையில், ஆளுங்கட்சி திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக, கடைசியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த வேண்டிய நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 23, அக்டோபர் 15 என இரண்டு தேதிகள் திட்டமிட்டு, அவற்றை தள்ளி வைத்துவிட்டு இப்போது அக்டோபர் 27ம் தேதி, தீபாவளிக்கு 3 நாட்கள் முன்னதாக இந்த அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது.
விஜய் மாநாடு பெரிய அளவில் நடந்துவிடக் கூடாது, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று விடக்கூடாது என்பதற்காக பின்தங்கிய ஒரு மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை நேரத்தில் அதுவும் மழை காலத்தில் இந்த அரசியல் மாநாட்டை நடத்தும் நிலைக்கு திமுக, விஜயை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் 50 ஆயிரம் பேர்தான் பங்கேற்க வேண்டும் என்றும் நெருக்கடி தந்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், மழை புயல் என எந்த தடைகள் வந்தாலும் மாநாடு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்படும். மாநாட்டில் பெண்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பெண்கள் நிறைய பேர் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இந்த மாநாடு நிச்சயமாக வெற்றி மாநாடாக அமையும். இதில் சந்தேகமே வேண்டாம். 2026ம் ஆண்டில் தமிழக முதல்வர் விஜய்தான் என்று கூறியிருக்கிறார். பெண்கள் ஆதரவு இருந்தாலே, பெரிய வெற்றி என்பதால் மாநாட்டில் நிறைய பெண்கள் பங்கேற்க தவெக ஏற்பாடுகளை செய்து வருகிறது.





