எப்போதுமே மனிதர்களுக்கு மற்றவர்களின் பிரச்னைகளை வேடிக்கை பார்ப்பது என்பது மனதின் ஒரு இயல்பாகவே மாறிவிட்டது. பக்கத்து வீட்டிலோ எதிர்த்த வீட்டிலோ அல்லது செல்லும் வழியிலோ ஏதாவது சண்டை அல்லது பிரச்னை என்றால் இருக்கிற வேலை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து கொண்டு வரப்பட்டதுதான் பிக்பாஸ். முன்பின் தெரியாத 15 முதல் 20 பேரை 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு 3 வேளையும் உணவு கொடுத்து டாஸ்க் என்ற பெயரில் அவர்களுக்குள் கோள் மூட்டி விட்டு அவர்கள் போடும் சண்டையை பார்வையாளர்களுக்கு தருவதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு துவங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டில் சீசன் 9 ஆக வரப்போகிறது. கடந்த 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்தாண்டில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளர் பணியை மேற்கொண்டார். இனி எப்போதுமே விஜய் சேதுபதிதான் என்று விஜய் டிவி நிர்வாகமே அறிவித்துவிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பிற மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை போலவே மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகர்ஜூனா இந்தியில் சல்மான்கான் கன்னடத்தில் கிச்சா சுதீப் போன்றவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மலையாளத்தில் கடந்த 3ம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் துவங்கியது. இந்த சீசனில் பங்கேற்ற 20 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்த நிலையில் வழக்கம் போல நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். முதல் வாரம் எந்த பிரச்னையும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாகவே சென்றது. இதைத் தொடர்ந்து 2வது வாரத்தில் வைல்டு கார்டு மூலம் 21வது போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். இதையடுத்து போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் நடத்தப்பட்டது.
வழக்கமாக இதுபோன்ற ரிஸ்க் ஆன டாஸ்க் 50 நாட்களுக்கு பிறகுதான் கொடுப்பது வழக்கம். இந்த டாஸ்க்கின் போது ஆண் போட்டியாளர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாறுமாறாக தாக்கிக் கொண்டனர். உடனடியாக அந்த டாஸ்க்கை நிறுத்திய பிக்பாஸ், இனி எந்த அறிவுரையும் போட்டியாளர்களுக்கு வழங்குவதில்லை என்று அறிவித்தார். இப்போது பிக்பாஸ் சீசன் 7 ரத்து செய்யப்படுவதாக பிரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் அறிவித்துள்ளதால் பிக்பாஸ் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.





