நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி ராமையா செந்தில் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் படத்தில் வருகின்றனர். இதில் மொய்தீன் பாய் என்னும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா, தனது தந்தையை பலரும் சங்கி என்று அழைப்பதாகவும் ஆனால் அவர் மனிதநேயம் மிக்கவர் என்றும் பேசினார். இதே போல் நடிகர் ரஜினிகாந்த் விஜயுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். ரஜினி பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரல் ஆகின.
இப்படியான சூழலில், லால் சலாம் படத்திற்குப் பிறகு வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இதனை இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் படத்திற்கான சூட்டிங் நடைபெற்று வரும் சூழலில், விரைவில் இறுதி கட்டப் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதமே படத்தை வெளியிட ஞானவேல் முடிவு செய்திருப்பதால் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
வரும் மே மாதம் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை முடுக்கி விட்டிருக்கிறார் லோகேஷ். தனது முந்தைய திரைப்படங்களைப் போல போதைப் பொருட்கள் சம்பந்தமான காட்சிகள் இருக்காது என்று இயக்குனர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதுவும் இந்த திரைப்படம் எல் சி யு வில் வராது என்றும் லோகேஷ் கனகராஜ் அடித்து கூறி இருந்தார்.
இப்படியான சூழலில் படத்தில் ரஜினியை இளமையாக காட்ட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார்களாம். ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில், இந்த முறையை தான் வெங்கட் பிரபு கையாண்டிருக்கிறார். தற்போது அதனையே லோகேஷ் கனகராஜ் எடுத்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.





