விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்களை கடந்திருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், கடந்தாண்டில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இனி வரும் ஆண்டுகளிலும் நடிகர் விஜய் சேதுபதியே பிக்பாஸ் தமிழ் சீசனில் தொகுப்பாளராக தொடர்வார் என்றும் விஜய் டிவி நிர்வாகம் அறிவித்து விட்டது. வழக்கமாக அக்டோபரில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஜனவரி மாதத்தில் நிறைவடையும், 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்கு பிடிக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வின்னர் ஆக அறிவிக்கப்படுகிறார்.
கடந்தாண்டில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வின்னர் ஆக முத்துக்குமார் வெற்றி பெற்றார். சௌந்தர்யா ரன்னர் ஆக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது 2025ம் ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 9க்கான ஏற்பாடுகளை விஜய் டிவி நிர்வாகம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிற மொழிகளிலும் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் விஜய் சேதுபதியை போல தெலுங்கில் நாகர்ஜூனா மலையாளத்தில் மோகன்லால் இந்தியில் சல்மான்கான் கன்னடத்தில் சுதீப் போன்ற நட்சத்திர நடிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இதில் பேசிய நடிகர் நாகர்ஜூனா கூறுகையில், விரைவில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. நடிகர் நடிகைகள் செலிபரட்டிகள் மட்டுமே இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்கள்.
இனி பொதுமக்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வரலாம். பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்கலாம் என்ற தகவலை கூறியிருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க தங்களது வீடியோவுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான இணையதள முகவரியும் அந்த வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது. இது தெலுங்கில் மட்டும்தானா, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதே வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.





