தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெகு எளிதாக வெற்றி பெற்று விடுகின்றன. படத்தின் பட்ஜெட்டை நம்பி படம் எடுக்காமல் ஹீரோ ஹீரோயின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் யார் என்று பொருட்படுத்தாமல் படத்தின் கதையை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் வெகு எளிதாக ஜெயித்து விடுகிறார்கள்.
ஏனெனில் மக்கள் திரைப்படங்களை ரசித்துப் பார்ப்பது அந்த படத்தின் அலாதியான கதையம்சத்தை தானே தவிர நடிகர் நடிகைகளை அல்ல என்பதை பல இயக்குனர்கள் உணர்வதில்லை. அதனால் தான் பெரிய நட்சத்திர ஹீரோக்களை வைத்து 300 கோடி 400 கோடி ரூபாய் வரை செலவு செய்து டம்மி கதைகளை படமாக்கி பலரும் ஏமாந்து போகின்றனர்.
இந்த பிரமாண்ட படங்கள் 300 முதல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் 100 கோடி ரூபாய் வசூலை அடைவதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. பெரிய நட்சத்திர ஓட்டலாக இருந்தாலும் பரிமாறப்படும் உணவு வகைகள் தரமாக ருசியாக இல்லை என்றால் யாரும் அங்கு சாப்பிட வர மாட்டார்கள். ஆனால் ரோட்டோர தள்ளுவண்டி கடைகளுக்கு தரமான ருசி காரணமாக கூட்டம் அலைமோதுவதை பார்க்கிறோம். அதுதான் நிதர்சனம்.
அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் உருவான பிளாஸ்ட் படம் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன் மனைவியாக நடிகை அபிராமி மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே கிடைத்த பலத்த ஆதரவால் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. கடந்த 25ம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அறிமுகம் இயக்குனர் சுபேஷ் கே ராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருடன் விவேக் பிரசன்னா ஜான் கொகேன் பவன் திலீபன் என பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
பிளாஸ்ட் படம் மொத்தம் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் மொத்தம் 76 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. அதாவது படத்தின் பட்ஜெட்டைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமான வசூலை குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு பிளாக் பஸ்டர் வெற்றி, படத்தின் வசூல் 76 கோடிகளை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.





