தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தந்தவர் இயக்குனர் ராம். இவர் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் பேரன்பு தரமணி தங்கமீன்கள் பறந்து போ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் சவரக்கத்தி என்ற படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிகர் சூரி மற்றும் நடிகை அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழுமலை. இந்தபடம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் எலி ஒரு முக்கியமான கேரக்டரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழுகடல் ஏழுமலை படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, இந்த கதையே புரியவில்லை. யாருக்குமே புரியவில்லை. இந்த படம் பற்றி மற்றவர்களிடம் கேட்டால் ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். ஏனெனில் ஒவ்வொருவர் அவர்களுக்கு ஏற்ற மாதிரி படத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். படம் முழுக்கவே இரண்டு மூன்று விஷயங்கள் ரிப்பீட் ஆனது. அதாவது நிவின்பாலி 8 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்.
அவருடன் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விடுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு காலகட்டத்திலும் அஞ்சலி மட்டும் பார்க்கிறார். காதலிக்கிறார். பிறகு சூரியுடன் சண்டை போடுகிறார். எலிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். இந்த படத்தில் கதை எங்கேயும் நகரவே இல்லை. எங்கேயாவது நகந்தால் தானே நாம் அதை பின்தொடர முடியும்? கதை ஆரம்பித்த இடத்திலேயே தேங்கி நின்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய பிரச்சனை. இந்த படத்தை பார்த்துவிட்டு கதை புரியவில்லை என்று சொன்னால் உனக்கு படம் பார்க்க தெரியவில்லை என்று நம்மை சொல்வார்கள். பாகவதர் ரஜினி கமல் விஜய் அஜித் மேட்ரிக்ஸ் இன்செப்ஷன் இண்டர்செல்லர் படம் எல்லாம் புரிகிறது. இது மட்டும் புரியவில்லை என்றால் அது எங்கள் தவறா? இல்லை உங்கள் தவறா?
அதேபோல் ஒரு சீனில் ஒரு விஷயத்தை கவனிக்கவில்லை என்றால் நீ ஏன் கவனிக்கவில்லை என்று கேட்பார்கள். நான் கவனிக்கும்படி நீங்கள் படம் எடுக்கவில்லை என்றுதான் அதற்கு அர்த்தம். ரசிகர்கள் மீது பழி போடாதீர்கள். ஒரு படம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது எங்கள் ரசனை சார்ந்த விஷயம். புரியவில்லை என்றால் யாருடைய பிரச்சனை? என்று ப்ளு சட்டை மாறன் இந்த படம் குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.





