தமிழ் சினிமா வட்டாரத்தில் குறிப்பாக ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத திடீர் டிவிஸ்ட் ஒன்று இன்று வெளியானது. அதுதான் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்கிற அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றாக மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் போட்டியிடுகிறார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் இயக்குனர் சுந்தர் சியின் மிக நெருக்கமான நண்பர். சுந்தா் சி இயக்கிய பல படங்களுக்கு பைனான்சியர் அவர்தான். அதனால் தனது நண்பரை எம்எல்ஏவாக பார்க்கும் ஆசையில் இந்த வாய்ப்பை அவரே முன்வந்து சுந்தர் சிக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே மனைவி குஷ்புவும் பாஜகவில் உள்ள நிலையில் சுந்தர் சியும் களத்தில் இப்போது இறங்கி விட்டார்.
இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சிக்காக தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வார். குறிப்பாக பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில் அவர் தனது கணவருடன் ஈடுபடுவார் என்று தெரிகிறது. மேலும் சுந்தர் சி வெற்றிக்காக ரூ. 30 கோடி வரை செலவு செய்ய ஏசி சண்முகம் திட்டமிட்டுள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் மதுரை தெற்கு தொகுதியில் சினிமா தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் மகன் விவேக் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அன்பு செழியன் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் தனது மகனின் வெற்றிக்காக ரூ. 20 கோடி வரை செலவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அந்த வகையில் சுந்தர் சி மற்றும் விவேக் என திரை பிரபலங்கள் போட்டியிடும் மதுரை தெற்கு தொகுதி மற்றும் மதுரை மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பண மழைதான் கொட்டப் போகிறது. ஏனெனில் இரண்டு வேட்பாளர்களுமே பணபலம் நிறைந்த செல்வாக்கின் பின்னணியில் களத்தில் நிற்பதால் வாக்காளர்களை தன்பக்கம் இழுக்க ஏகப்பட்ட காந்தி நோட்டுகளை பறக்க விடும் நிலையில் வாக்காளர்களுக்கு சுபிட்சமான ஒரு மாதமாக ஏப்ரல் அமையப் போகிறது.





