நடிகர் விஷால், செல்லமே படத்தில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இயக்குநர் தருண் கோபியால் திமிரு படம் மூலம் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர். தொடர்ந்து சண்டக்கோழி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த வெற்றி படங்களால் விஷால் முன்னணி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.
வாழ்க்கை பயணம் போல, சினிமா பயணமும் கரடு முரடானது. மேடுபள்ளங்கள் நிறைந்தது என்பதற்கேற்ப நல்ல படங்களில் நடித்த விஷால், ஒரு கட்டத்துக்கு பிறகு தோல்வி படங்களை கொடுக்க துவங்கினார். அவர் பெரிய எதிர்பார்ப்பில் நடித்த படங்கள் பலவும், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஏமாற்றத்தை தந்தன.
ஒரு கட்டத்துக்கு பிறகு, விஷால் படம் என்றாலே, அதில் விஷால் சிறப்பாக நடித்திருந்தாலும் படம் நன்றாக இருக்காது என்பது போன்ற ஒரு உணர்வை ரசிகர்களுக்கு தந்துவிட்டது. குறிப்பாக கடந்த 5,6 ஆண்டுகளில் விஷால் நடித்த எந்த படமுமே ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படாத படங்களாக இருந்து விட்டன.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் – எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை 100 கோடி ரூபாய் என்ற இலக்கை கடந்து, படம் பிளாக் பஸ்டர் மூவியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியால் கம்பேக் கொடுத்துள்ள விஷால், உற்சாகத்தில் இருக்கிறார். நடிகர் எஸ்ஜே சூர்யாவும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
இப்போது, இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி போலவே, ஹரி இயக்கும் இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குமாரசக்கணபுரம் என்ற கிராமப்பகுதியில் விஷால் நடித்த படப்பிடிப்பு நடந்த போது, அங்கு ஷூட்டிங்கை பார்க்க வந்த ஒரு சிலரிடம், உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டிருக்கிறார். அதற்கு, எங்கள் பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் சிரமப்படுகிறோம் என்று கூறி இருக்கின்றனர்.
உடனே விஷால், தனது சொந்த செலவில் அங்கு போர்வெல் இயந்திரங்களை வரழைத்து கண்மாய் கரை அருகே போர்வெல் அமைத்து, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளை வைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விஷாலின் இந்த தாராள குணத்தை பார்த்து, மனதார பாராட்டி வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.





