இந்தியன் படம் கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் 78வயது தாத்தாவாக நடித்த கமல், லஞ்சம் வாங்குபவர்களை கத்தியால் குத்தி கொலை செய்வார். அப்போது அவர்களை முன்னதாக வர்மக் கலை தாக்குதல் நடத்தி எதிர்த்து போராட விடாமல் செய்து, குத்திக் கொல்வார். இது ரசிகர்களிடையே பலத்த ஆச்சரியத்தை வரவேற்பை பெற்றது. இப்போது இந்தியன் 2 படத்திலும் அதே வர்மக்கலையை பயன்படுத்துகிறார்.
இந்நிலையில், இது பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை எச் எம் எஸ் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மதுரை மாவட்ட 4வது முன்சீப் கோர்ட்டில், அவர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், மஞ்சா வர்ம கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில், கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சியளித்து வருகிறோம்.
கடந்த 1996ம் ஆண்டில் இந்தியன் படத்துக்காக, நடிகர் கமல்ஹாசனுக்கு வர்மக் கலைகள் படப்பிடிப்பு தளத்தில் பயிற்சியளித்து கற்றுக்கொடுத்தேன். வர்மக்கலை பயிற்சி முறைகள், அறிவியல் பூர்வமான விளக்கங்கள் குறித்தும் படத்தின் இயக்குனர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா என்னிடம் கேட்டுத் தெரிந்துக்கொண்டனர்.
இந்தியன் படப்பிடிப்பிலும் பங்கேற்று, வர்மக் கலை சண்டை பயிற்சிகளையும் அமைத்துக் கொடுத்தேன், படத்தின் டைட்டில் கார்டிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்தியன் படத்தில் கமல் பயன்படுத்திய வர்மக்கலை முத்திரைகள் அனைத்தும் தொடுவர்மம் 96 வர்மக்கலை என்ற எனது புத்தகத்தில் இடம்பெற்றது. அது வேறு எந்த புத்தகத்திலும் முத்திரை படங்களுடன் வந்தது இல்லை. எனக்கு மட்டுமே அவை சொந்தமானவை.
இந்நிலையில் இந்தியன் 2 படம் விளம்பரங்களில், நான் ஏற்கனவே சொல்லிக்கொடுத்த முத்திரைகளை பயன்படுத்தி போஸ்டர்கள் வௌிவந்தன. எனது அனுமதி இல்லாமல், அந்த வர்மக்கலை முத்திரைகளை பயன்படுத்தி உள்ளனர். இதற்காக என்னிடம் தடையில்லா சான்று பெற வேண்டும், என்னுடைய பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என்று நான் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை இல்லை.
எனவே எனது கோரிக்கை நிறைவேறும் வரை இந்தியன் 2 படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறார்.நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு குறித்து நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வருகிற 9ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உ்ததரவிட்டுள்ளார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





