தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிக் கொண்டு இருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகளில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்போதும் இளையராஜா இசைக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவர் ஸ்டுடியோவில் தேதி கேட்டு தவம் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவை இசையால் இளையராஜா ஆட்சி செய்த காலம் என்றால் அது 1980 – 90கள்தான். அப்போது ஒரு நாளில் 3 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை கால நேரங்களில், பல நாட்களுக்கு தூக்கமின்றி ரிலீஸ் படங்களுக்கு இசை பணியை முடித்து தந்திருக்கிறார் இளையராஜா.
தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு சினிமாவில் இசையமைக்கும் எண்ணத்தில் வந்த இளையராஜா, அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகியோர், சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்தனர். அப்போது பாரதிராஜாவும் அவர்களுடன் இருந்தார்.
முதன்முறையாக பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் சிவக்குமார், சுஜாதா நடித்த அன்னக்கிளி படத்தில்தான் இளையராஜா இசையமைத்தார். எஸ் ஜானகி குரலில், அன்னக்கிளி உன்னை தேடுதே ஆறுமாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே என்ற பாடல் வரிகள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்து இளையராஜாவுக்கு பெரிய வரவேற்பை அளித்தது.
அன்று துவங்கி இன்று வரை இசைஞானியாக வலம் வரும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, இரண்டு பாகங்களாக உருவாகிறது. கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார். 2 பாகங்களாக படம் உருவாகிறது. வரும் அக்டோபரில் ஷூட்டிங் துவங்குகிறது.
கன்னெக்ட் மீடியா, மெர்க்குரி ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, கலை இயக்குனராக முத்துராஜ் இணைந்துள்ளனர். திரைத்துறையில் பிரபலமான இரண்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.





