சினிமாவை காட்டிலும் ஓடிடி தளங்களில் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக கோவித் 19 காலகட்டத்தில்தான், இது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. சினிமாக்களும் 4 வாரங்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிற நிலையில் ஓடிடி தளங்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இயக்குநர் சசிக்குமார், கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து வெப் சீரிஸ் இயக்குகிறார். அதேபோல், தமிழில் போதிய வாய்ப்பில்லாத பல நடிகர், நடிகைகள், இயக்குநர்களுக்கு இப்போது வெப்சீரிஸ் கைகொடுத்து வருகிறது.
பாரதிகண்ணம்மா படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திருமணம் படம் வரை நிறைய வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குநர் சேரன்.
படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி, அவர் இயக்கிய பல படங்களில் சேரன் நடித்தவர். தங்கர்பச்சான் போன்ற பிற இயக்குநர்களின் படங்களிலும் சேரன் நடித்தார். சினிமாவில் போதிய வாய்ப்பில்லாததால், வெப் சீரிஸ் பக்கம் சென்ற சேரன், இப்போது சேரனின் ஜர்னீஸ் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார்.
இந்த வெப் சீரிஸ்சில் நடிகர்கள் சரத்குமார், கலையரசன், பிரசன்னா, ஆரி அர்ஜூனன், திவ்யபாரதி, ஆடுகளம் நரேன், இளவரசு, மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வழக்கமாக கெட்ட வார்த்தைகள் நிறைந்த வெப் சீரிஸ் மத்தியில், தரமான ஒரு தொடராக சேரனின் தொடரை எதிர்பார்க்கலாம்.
அதாவது ஒரு வேலைக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். அதில் யாரை தேர்வு செய்யப் போகின்றனர் என்பதுதான் இந்த வெப் தொடரின் மையக்கரு. இதில் சரத்குமார், ஜெயப்பிரகாஷ் கார்பரேட் நிறுவன அதிபர்களாக நடித்துள்ளனர். மாரிமுத்து போலீஸ் கேரக்டரில் வருகிறார். சேரனின் ஜர்னிஸ் வெப்தொடர் வரும் 12ம் தேதியன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.





