2002 ஆம் ஆண்டு சீயான் விக்ரம், கிரண், கலாபவன் மணி, மலையாள நடிகர் முரளி உட்பட பலரும் நடித்து வெளிவந்த திரைப்படம் “ஜெமினி”. இத்திரைப்படத்தை சரண் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. பரத்வாஜ் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக “ஓ போடு” பாடல் ஒரு பெப்பியான பாடலாக அமைந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஒருவரை குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் முரளி, சிங்கப்பெருமாள் என்ற காவல் அதிகாரியாக நடித்திருந்தார். முதலில் இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குனர் சரண், முரளி கதாபாத்திரத்தை படம் நெடுகிலும் நல்லவர் எனவும் அதன் பின் கிளைமேக்ஸில் அவர் கெட்டவர் என்பது போலவும் எழுதப்பட்டிருந்தது.
படம் முழுவதும் நல்லவராக வந்து இறுதியில் கெட்டவர் என்று டிவிஸ்ட் வைத்து முடித்த விதம் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் இயக்குனர் சரணிடம், “இந்த முடிவை கொஞ்சம் மாற்றினால் சரியாக இருக்கும். நீங்கள் எதற்கும் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் செல்வக்குமாருடன் இணைந்து இந்த படத்தின் கிளைமேக்ஸை பற்றி கொஞ்சம் பேசுங்கள்” என்று ஆலோசனை கூறினார்.
அதற்கு சரண், “அவர் கொஞ்சம் பழைய ஆளு, அவரிடம் நான் பேசினால் சரியாக வருமா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு ஏவிஎம் சரவணன், “நீங்கள் பேசுங்கள், நிச்சயம் சரியாக வரும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து சரண், பீட்டர் செல்வக்குமாருடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பீட்டர் செல்வக்குமார், “எப்போதுமே திரைக்கதையில் கொஞ்சம் ஏமாற்றினால் மக்கள் உங்களை மன்னித்து விடுவார்கள். ஆனால் நீங்கள் அவர்களை முட்டாள் ஆக்கவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் வைத்திருக்கிற விஷயம் அவர்களை முட்டாள் ஆக்குவது போலத்தான் இருக்கிறது” என கூறி, அத்திரைப்படத்தின் கிளைமேக்ஸில் பல திருத்தங்களை செய்தாராம். அதன் பிறகுதான் அத்திரைப்படம் ஹிட் அடித்திருக்கிறது.





