தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமார். ஆரம்பத்தில் நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா என்ற அடையாளம் இருந்தாலும் ஒரு காலகட்டத்துக்கு பிறகு தனக்கான அடையாளத்தை சினிமாவில் நிரூபிக்க துவங்கினார் சூர்யா. எந்த கதாபாத்திரம் என்றாலும் சிறந்த அழுத்தமான நடிப்பை தந்தார்.
குறிப்பாக மௌனம் பேசியதே உன்னை நினைத்து நந்தா காக்க காக்க கஜினி பிதாமகன் அயன் சிங்கம் போன்ற படங்களில் சூர்யா சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி நட்சத்திர ஹீரோவாக மாறினார். கடைசியாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படம் கடந்த 2013ம் ஆண்டில் ஜூலை 5ம் தேதி வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.
அதன்பிறகு நடிகர் சூர்யா கடந்த 13 ஆண்டுகளில் 13 படங்களில் நடித்து விட்டார். இதில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படமும் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று என்ற 2 படங்களும்தான் வணிக ரீதியான வெற்றியை பெற்றது.
கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடித்த சிங்கம் 3 பசங்க 2 என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி தானா சேர்ந்த கூட்டம் அஞ்சான் 24 எதற்கும் துணிந்தவன் காப்பான் கங்குவா என தொடர்ந்து 10 படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன. அதிலும் கங்குவா படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இதையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்தாண்டு மே மாதம் 1ம் தேதி வெளியானது. இந்த படம் ரூ. 230 கோடி வரை வசூலித்து வணிக ரீதியான வெற்றிப் படம் என்று அறிவிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் படமாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு சூழலில்தான் இன்று கருப்பு படம் ரிலீஸ்சை சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், கடன் பிரச்னையில் சிக்கி இந்த படம் ரிலீஸ்சும் கேள்விக்குறியாகி விட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்து சூர்யாவுக்கு கம்பேக் தரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது. திரை பயணத்தில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படமும் சோதனை தருவது ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.





