சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் ஆதித்ய கரிகாலனாக வந்த விக்ரம், தனது முதிர்ச்சியான நடிப்பினால் மீண்டும் பலரையும் கவனிக்க வைத்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நந்தினி ஆன ஐஸ்வர்யா ராயுடன் பேசும் காட்சிகள் பாராட்டைப் பெற்றன.
இப்படி சீயானுக்கு புகழ் ஒரு பக்கம் கூடி இருந்தாலும், வெற்றி என்பது சமீப ஆண்டுகளாகவே இல்லாமல் போய்விட்டது. அவர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் திரைப்படம்தான், விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது என்று கூற முடியும். அதன் பிறகு வெளியான ராஜபாட்டை, இருமுகன், ஐ, கோப்ரா, பத்து எண்றதுக்குள்ள, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இப்படியான சூழலில்தான் சியான் விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித்தை தேர்வு செய்து இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு, தங்கலான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பசுபதி, மாளவிகா, மோகனன் பார்வதிமேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில், சுதந்திரத்திற்கு முன்பு நடைபெற்ற காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் அதிகம் பேசப்படுவது விக்ரமின் கெட்டப்தான்.
அடர்ந்த தாடி, நீண்ட ஜடை முடி, கையில் தடி என மிரட்டலான லுக்கில் காட்சியளிக்கிறார் விக்ரம். இதன் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வரும் நவம்பர் 1ஆம் தேதி இதன் டீசரும் வெளியாகிறது. இப்படியான சூழலில் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் சித்தா திரைப்படத்தை எடுத்து பாராட்டைப் பெற்ற அருண்குமார்தான் விக்ரமின் அடுத்த படத்தை எடுக்கிறாராம். ஏற்கனவே இவர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்திருக்கிறார். தற்போது விக்ரமுடன் இணையும் திரைப்படம் முழுக்க முழுக்க என்டர்டைன் படமாக உருவாகிறதாம். தூத்துக்குடியை கதைக்களமாக கொண்டு எடுக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





