இன்றைய சட்டசபை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம்.
இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம்.
ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்.
நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை?
இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தனது எக்ஸ் பதிவில் விஜய் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





