லியோ படம் ரிலீஸ் ஆன அன்றே 148 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. கடந்த 4 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டு வரும் நிலையில், அதெல்லாம் வடிக்கட்டிய பொய் என்ற தகவல் வைரலாகி வருகிறது. லியோ ரிலீஸ் செய்த தியேட்டர்காரர்களுக்கு பயங்கர நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் நடித்த லியோ படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. கைதி, விக்ரம் போன்ற மாஸ் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால், விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் படத்தை வரவேற்றனர்.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் லியோ படம், பாதி வரை சிறப்பாகவே இருந்தது. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் பார்த்தவர்கள், இது அதே படம்தானா, வேறு படமா என்று நினைக்கும் அளவுக்கு படத்தின் கதையே வேறுமாதிரியாக இருந்தது.
பெரும்பாலான தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டமே இல்லாத நிலையில், 400 கோடி, 500 கோடி என எந்த வகையில், இப்படி வசூல் குவிகிறது என புரியாமல் பலரும் குழம்பிப் போயுள்ளனர். இதுகுறித்து ரஜினி, அஜீத் ரசிகர்கள் தங்களது காட்டமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், சமீபத்திய ஒரு நேர்காணலில், லியோ திரையிட்ட திரையரங்குகளில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களையே இழுத்து மூடும் அளவுக்கு மோசமான நிலையை அதிக பங்கு கேட்டு விநியோகஸ்தர்களும், தயாரிப்பு நிறுவன தரப்பும் ஏற்படுத்தி விட்டதாக கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
லியோ படத்தை பொறுத்த வரை, விஜய் ரசிகர்களுக்கு இது கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் கடந்து, விஜய் ஒருவருக்கான படமாக மட்டுமே அவர்களுக்கு பிடித்துப் போகலாம். ஆனால், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இந்த படம், மிகப்பெரிய ஏமாற்றத்தையே தரும். அந்த வகையில், இந்த வசூல் நிலவரம் எல்லாம், மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெஷின் என வடிவேலு ஒரு படத்தில் விற்பதை போல, மிகப்பெரிய பித்தலாட்டம்தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.





