பூக்கடைகளுக்கும், மீன் கடைகளுக்கும் விளம்பரமே தேவையில்லை என்பார்கள். ஏனென்றால், கொஞ்ச தூரத்துக்கு முன்னதாக வரும் பூ வாசனையே பூக்கடைகள் இருப்பதை சொல்லி விடும். அதே போல் அருகில் மீன்கடை இருப்பதை, மீன்களின் வாசமே அதை காட்டிக்கொடுத்து விடும் என்பார்கள். ஆனால் இப்போது பூக்கடைகளுக்கும், மீன் கடைகளுக்கும் கூட விளம்பரம் தேவை என்னும் அளவுக்கு நிலமை மாறி விட்டது.
ஒரு நல்ல திரைப்படம் தனக்கான வெற்றியை அதுவே உருவாக்கிக் கொள்ளும் என்பார்கள். ஒரு படத்தை பார்க்கும் ரசிகன், நிச்சயம் அது நல்ல படமாக, மனதை கவரும் விதமான படமாக இருந்தால் அதை நிச்சயமாக மற்றவர்களிடம் சொல்லவே செய்கிறான். அதுவும் சமூக வலைதளங்களின் புழக்கம் அதிகரித்துள்ள இன்றைய சூழலில் ஒரு பதிவு வெளியிட்டாலே பல ஆயிரம் பேரை, பல லட்சம் பேரை சில நிமிடங்களில் சென்றடைந்து விடுகிறது.
மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு, குட்நைட், சித்தா போன்ற படங்களுக்கு விளம்பரம் அதிகமாக செய்யவில்லை. படம் பார்த்த ரசிகர்களே விளம்பர தூதுவர்களாக மாறி, அந்த படத்தை பற்றி சிலாகித்து பேசி முகநூலிலும், எக்ஸ் பக்கத்திலும் பதிவுகள் போட அதுவே படத்துக்கு மிகப்பெரிய பிரமோவாக மாறியது. படங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது.
அதே நேரத்தில், லால் சலாம் படத்துக்கு பெரிய அளவில் பிரமோ பண்ணாததால் தான் படம் சரியாக ஓடவில்லை என்ற ஒரு தவறான காரணத்தை சொன்னார் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை என்பதை விட படத்துக்கு என்ன விளம்பரம் வேண்டும் என்று ரசிகர்கள் கிண்டலாக கேட்கின்றனர். அதே போல் இந்தியன் 2 படத்தை கழுவி ஊற்றவும் ரசிகர்கள் மறக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று, அவரது 44வது படத்தின் வீடியோ காட்சி வெளியானது. இதில் வாயில் சிகரட்டுடன் சூர்யா காணப்பட்டார். சமீபத்தில்தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து போதை பழக்கத்துக்கு எதிராக ஆவேசமாக அறிக்கை வெளியிட்டார் சூர்யா. ஆனால் அவரே சிகரட் புகைத்தபடி வரும் காட்சியை வெளியிடுகிறார் என்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ஆனால், தங்களது படத்தின் விளம்பரத்துக்காக, புரமோ போலவே இதையும் ஒரு யுக்தியாக ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது ரசிகர்களுக்கு புரிவதில்லை. அதாவது லியோ படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை, சிகரட் புகைத்தபடி வரும் சூர்யா, தனுஷ் புகைப்பிடித்த போஸ்களுடன் வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படி எல்லாமே படத்தின் புரமோவுக்கான ஒரு யுக்தி தான், இதன்மூலம் ஒரு பரபரப்பை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி, படத்துக்கான ஒரு மலிவான விளம்பரத்தை செய்துக்கொள்கின்றனர் என்பதே இதில் மறைந்திருக்கும் அசிங்கமான உண்மை.





