நடிகர் கமல்ஹாசனுக்கு இது தமிழ் சினிமாவில் அறுவடைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படத்தில் நடித்தால், அந்த படம் முடியும் வரை அடுத்த படத்தில் நடிப்பது கமலின் வழக்கமில்லை. ஏனெனில் அந்த படத்துக்கான கெட்டப்பில் தாடி மீசை, அல்லது தாடி மீசை இல்லாமலோ நடித்திருப்பார்.
ஆனால் இப்போது ஒரே காலகட்டத்தில் இந்தியன் 2, இந்தியன் 3, புராஜெக்ட் கே (கல்கி) தக்லைப், வினோத் படம், பிக்பாஸ் நிகழ்ச்சி என ஏகப்பட்ட கமிட்மெண்டுகளை வைத்துக்கொண்டு நேரத்தை பங்கு போட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார். அவரை பொறுத்த வரை விக்ரம் கொடுத்த மாபெரும் வெற்றியால், அவருக்கு இது பணமழை பொழியும் காலமாக மாறியிருக்கிறது.
துவக்கத்தில் அரசியல்வாதியாக களம் இறங்கிய கமல்ஹாசன் திமுக, அதிமுக அரசுகளை தான் வசைபாடினார். அவர்களால்தான் தமிழ்நாடு இப்படி ஒரு மோசமான நிலைமையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பிரசார மேடைகளிலும் திமுக, அதிமுக அரசுகளின் மோசமான செயல்பாடுகளை திட்டித் தீர்த்தார்.
மத்தியில் பாஜக அரசை எதிர்த்த வகையில், காங்கிரஸ் ஆதரவாளராக அவரே காட்டிக்கொண்டார். ராகுல் நடை பயண நிகழ்ச்சியில், கமல்ஹாசனே நேரில் சென்று கலந்துக்கொண்டார். துவக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த பெருமை பேசிய கமல், பின்னர் ராகுல் காந்தி புகழ் பாடினார்.
கடந்த 2015ம் ஆண்டில் மழைவெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்ட போது, மாநில அரசை குற்றம் சாட்டிய கமல்ஹாசன், இப்போது அரசு இயந்திரம் என்ன செய்யும், மக்கள்தான் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் முக்கியம். அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது என்கிறார்.
ஒரு தயாரிப்பாளராக, நடிகராக தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு அரசியல்வாதியாக எம்பி சீட் வாங்க, திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல், அதற்கும் ஜால்ரா போட்டாக வேண்டும் என்ற நிலைக்கு இப்போது வந்துவிட்டார். அதன் வெளிப்பாடாக எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் எல்லாம் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார் என, சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.





