நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் நல்ல கலைஞராக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். துவக்கத்தில் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்து மனம் கவர்ந்த கருணாஸ் ஏப்ரல் மாதத்தில், பாபா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பாணா காத்தாடி, வில்லன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஒரு கட்டத்தில் அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தினார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர்.
அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த போது, கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவால், கட்சி தாவலை தடுக்க எம்எல்ஏக்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டு அவர்களை சொகுசாக கவனித்து, 3 வேளையும் விருந்தளித்து பராமரித்தனர்.
அந்த சமயத்தில் ஒரு எம்எல்ஏவின் விருப்பத்திற்காக அங்கு ஒரு பிரபல நடிகை சென்றதாகவும், அதற்காக ரூ. 25 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு அதிமுக நிர்வாகி ஊடகங்களில் தெரிவித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் கருணாஸ் பெயரும் அடிபட்டு, பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானார். இதுகுறித்து போலீசில் கருணாஸ் புகார் அளித்தார்.
சமீபமாக கேரளா சினிமாத்துறையில் அட்ஜஸ்டமென்ட் பிரச்னை விவகாரமாக மாறிய நிலையில், இதற்கான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான அந்த கமிஷன், மலையாள சினிமா துறையில் நடிப்பு வாய்ப்புக்காக பலவிதங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக அழுத்தம் தருகின்றனர் என்ற அறிக்கையை தந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக உள்ள நடிகர் கருணாஸிடம் கேட்ட போது, அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா, இந்த சமூகத்தில் வேறு எங்கேயும் இல்லையா, அது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். யாருடைய விருப்பமும் இல்லாமல் இங்கு எதுவுமே நடப்பதில்லை. எனக்கு ஹேமா கமிஷன் குறித்து தெரியவில்லை. தெரிந்துவிட்டு சொல்கிறேன் என்று கருணாஸ் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.





