நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கூலி. வருகிற 14ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. நடிகர் ரஜினிகாந்துடன் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் இணைந்த காம்போ என்பதால் அதிரிபுதிரியாக படம் இருக்கும் என்று தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை இந்த படத்தில் தனது ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கப்பல் துறைமுகத்தில் கேங்கஸ்டர் கதைக்களத்தில் உருவான படம் என்பதால் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. தவிர ஐட்டம் பாடல் ஒன்றுக்கு பூஜா ஹெக்டேவும் சௌபின் சாஹிரும் அதிரடியான குத்தாட்டம் போட்டிருக்கின்றனர். சமீபத்தில் மோனிகா பாடல் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் இப்போது கூலி படத்துக்கான முன்பதிவு தியேட்டர்களில் நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் கூலி படம் டிக்கெட் முன்பதிவில் விறுவிறுப்பாக டிக்கெட் விற்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சில தியேட்டர்களில் 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை கூடுதலாக இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 500 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் கார்பரேட் நிறுவனங்களில் வரும் 14ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் முன்னதாக கூலி படம் ரிலீசை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுப்பு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கூலி படம் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கேரளம் மாநிலத்தில் கூலி படம் முன்பதிவு துவங்கிய 1 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. அத்துடன் 14, 15 மற்றும் 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு டிக்கெட் விற்பனை முடிந்து ஹவுஸ் காட்சிகள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை கூலி படம் முன்பதிவு டிக்கெட் விற்பனை மட்டுமே ரூ. 50 கோடியை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.





