சன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் நடிகராக அறிமுகமானவர் போஸ் வெங்கட். பிறகு சினிமாவில் சிவாஜி, தேவராட்டம், தாஜ்மகால், தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம், சார் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவர், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் கூறியிருப்பதாவது, விஜயை பிடிக்கவில்லை என்று நான் எங்கேயும் சொல்லவே இல்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய்தான். அவர் நடித்த எந்த படத்தின் கதையை கேட்டாலும் அப்படியே சொல்லுவேன். விஜய் போஸ்டர் பக்கத்தில் நின்றுகூட போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் எங்கேயும் விஜய் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லவே இல்லை.
ஆனால் விஜய்க்கு நான் இப்போது ரசிகர் மட்டுமல்ல, அவர் பொதுவெளிக்கு வந்து விட்டார். அரசியலுக்கு வந்த பிறகு பலரும் தங்களின் கருத்தை சொல்லவே செய்வார்கள். அதை தடுக்க முடியாது. விஜய் கட்சி ஆரம்பித்தார், நான் கொள்கை என்ன என்று கேட்கிறேன். நீட் எதிர்ப்பு என்கிறார். காமராஜரும் பெரியாரும் தலைவர்கள் என்கிறார்.
சாவர்க்கரை நிச்சயமாக பிடிக்காது என்கிறார். பாஜகவை ஆதரிப்பதில்லை இல்லை என்கிறார். சனாதனத்தை ஆதரிக்கவில்லை என்கிறார். இவை அனைத்தையும் ஏற்கனவே திமுகதான் செய்து வருகிறது. அப்புறம் எதற்கு விஜய் வருகிறார். அவரிடம் ஒரு தனித்துவமான கொள்கை இருக்க வேண்டும். நானும் அவர் ரசிகர்தான். ஆனால் நான் ஓட்டு போட மாட்டேன். அவர் உடனே முதல்வர் ஆகிவிட முடியுமா? மக்களுக்காக உழைக்க வேண்டும், மக்கள் பதவியை தரும் போது ஏற்க வேண்டும்.
நான் விஜய் முதல்வராக வரவே கூடாது என்று சொல்லவில்லை. தாராளமாக வரட்டும். தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும், முதல்வராகட்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததால், ஒரு பொறாமையும் இல்லை. அவர் சொந்த பணத்தை ரூ. 20 கோடி செலவு செய்து மாநாட்டை சிறப்பாக நடத்தியிருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல வேண்டும். பொது மக்களில் ஒருவனாக இதை கேட்கிறேன்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது பண்ருட்டி ராமச்சந்திரன் போல பலர் உடன் இருந்தனர். விஜயுடன் இருப்பவர்கள் யார் என்றே தெரியவில்லை. அவருடன் இருப்பவர்கள் ஏதோ ரசிகர் மன்ற நிர்வாகி போல இருக்கிறார்கள். அது ஒரு கட்சி போல தெரியவில்லை. ஒரு ரசிகர் மன்றம் விழா எடுத்தால் எப்படி இருக்குமோ அது போல இருந்தது மாநாடு, அவருடன் பலமான தலைவர்கள் இல்லை என்று போஸ் வெங்கட் கூறியிருக்கிறார்.





