தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு அரசனாக இருந்தவர் நடிகர் வடிவேலு என்றால் அது மிகையல்ல. குறிப்பாக 1990 முதல் 2010ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் வடிவேலு தனி ராஜ்யமே நடத்தினார் என்றால் அது உண்மைதான். அவர் நடித்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
குறிப்பாக பெரிய ஹீரோக்களின் தோல்வி படங்களில் கூட வடிவேலு காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வெற்றியைப் பெற்றன. சின்ன நடிகர் படங்கள், வடிவேலுவுக்காக அதிக நாட்கள் ஓடின. அதனால் வடிவேலு கால்ஷீட் கிடைப்பது பெரிய விஷயமாக இருந்தது. ஒரு நாளுக்கு ரூ. 12 லட்சம் வரை வடிவேலு சம்பளமாக வாங்கினார். ஆரம்பத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய படங்களில் மாநகரம், வின்னர் போன்ற படங்களில் வடிவேலு டித்திருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், நாய் சேகர் போன்ற பிரபலமான கேரக்டர்கள் வடிவேலுவுக்கு அமைந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு நடித்த படத்தில் சந்தானமும் நடித்ததால் பிரச்னை ஏற்பட்டது. அதனால் சுந்தர் சிக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் ஏற்பட்டது. அதன்பிறகு சுந்தர் சி இயக்கும் படங்களில் வடிவேலு நடிப்பதை தவிர்த்து விட்டார். அதனால் கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. சுந்தர் சி தனது படங்களில் விவேக், எம்எஸ் பாஸ்கர், சந்தானம் யோகி பாபு போன்றவர்களை நடிக்க வைத்தார்.
இந்நிலையில் பழைய பகையை, காழ்ப்புணர்ச்சியை மறந்து இப்போது சுந்தர் சி இயக்கும் ஒரு புதிய படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படம் முழுவதும் அவர் வருவது போல் இந்த படத்தில் வடிவேலு கேரக்டர் அமைந்துள்ளது. இந்த படத்தில் மொத்தம் ஐந்து கெட்டப்புகளில் நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார்.
அரண்மனை 4 படத்தை தொடர்ந்து இந்த புதிய படம் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கியது. தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் கேத்தரின் தெரசா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இப்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மீண்டும் இணைந்து இருப்பதும், முன்னணி நடிகைகளில் ஒருவரான வாணி போஜன் நடித்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





