தமிழ் சினிமாவில் வெளியான எந்த ஒரு தமிழ் படமும் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டியது இல்லை. ஆனால் இந்தி தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் 1000 கோடி ரூபாய் வசூலை பல படங்கள் எட்டி விட்டன. சில படங்கள் 2000 கோடி ரூபாய் வசூலை கூட நெருங்கிவிட்டன. உதாரணமாக கடந்தாண்டு டிசம்பரில் வெளியான புஷ்பா 2 படத்தின் மொத்த வசூல் 1800 கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால் மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் சினிமாவில்தான் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர்கள் இருக்கின்றனர். நட்சத்திர நடிகர்கள் இருக்கின்றனர். இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். மற்ற மொழிகளை காட்டிலும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமா வெளிநாடுகளின் தரத்தில் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் இன்னும் தமிழ் படங்கள் எதுவும் 1000 கோடி ரூபாய் வசூல் இலக்கை தொடவில்லை.
கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் மொத்தம் 8 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன. இதில் விஜய் நடித்த தி கோட் 445 கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 325 கோடி ரூபாய் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் 265 கோடி ரூபாய் ஆகிய 3 படங்களும் அதிக வசூல் செய்த படங்களாக இருக்கின்றன.
அடுத்து ராயன் மகாராஜா அரண்மனை 4 இந்தியன் 2 கங்குவா ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தன. ஆனால் இதில் இந்தியன் 2 மற்றும் கங்குவா படங்கள் மிக மோசமான விமர்சனத்திலும் சிக்கிய படங்களாக இருந்தன. ஆக மொத்தம் 240க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் கடந்தாண்டில் வெளியாகி மொத்தம் 8 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலையே கடந்தன.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. பான் இந்தியா படமாக பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் இந்த படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ரஜினியின் தீவிர ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் டிரெய்லர் அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை.
டிரெய்லரில் படத்தின் காட்சிகள் அனைத்தும் துறைமுக பின்னணியில் வருகிறது. படத்தில் ஆக்சன் காட்சிகளே பிரதானமாக இருக்கின்றன. காதல் காமெடி பேமிலி சென்டிமென்ட் போன்றவை இந்த படத்தில் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. படத்துக்கும் ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. லியோ படத்தை சொதப்பியது போல இந்த படத்திலும் இயக்குனர் சொதப்பி இருப்பாரோ என்ற அச்சமும் ரசிகர்களிடம் உள்ளது. அதனால் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் என்பது சாத்தியமில்லை என்றே பரவலாக ரசிகர்களின் கமெண்ட் ஆக உள்ளது.





