நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். இப்போதைக்கு தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய்தான். தி கோட் படத்துக்கு அவர் ரூ. 200 கோடியும், தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துக்கு விஜய் ரூ. 250 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டில் துவங்கிய விஜய் தனது கட்சிக் கொடியை கொள்கை பாடலை அறிமுகப்படுத்தினார். பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட சக நடிகர் நடிகைகளிடம் அதிகம் பேசாத நடிகர் விஜய் இந்த மாநாட்டில் 48 நிமிடங்கள் 1000 வாலா பட்டாசு போல அதிரடி பேச்சை வெளிப்படுத்தி தமிழக அரசியல் கட்சிகளை அதிர வைத்தார். திமுக பாஜக கட்சிகள் குறித்து பகிரங்கமாக விமர்சித்தார். அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் வெளிப்படையாக கூறினார்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜீத்குமார் தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் பலத்த ஏமாற்றத்தை தந்த போதிலும் கடந்த 10ம் தேதி ரிலீஸான குட் பேட் அக்லி சக்கைப் போடு போட்டு வருகிறது. 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூலை கடந்திருப்பது பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அதே போல் முன்னணி இயக்குனர்கள் பலரும் நடிகர் அஜீத்குமாருக்கு கதை சொல்ல ஆவலாக இருக்கின்றனர். அவர் கார் ரேஸ் முடித்து விட்டு திரும்பியவுடன் அவரை சந்தித்து சம்மதம் பெற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆனால் நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் ஹெலிகாப்டர் ஓட்டுதல் என விளையாட்டில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வரும் அக்டோபர் வரை கார் ரேஸில் கலந்துக்கொள்ளும் அவர் அதன்பிறகு 5 மாதங்கள் மட்டுமே படத்தில் நடிப்பார். பிறகு 2026 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கார் ரேஸில் கலந்துக்கொள்ள போய் விடுவார். அதனால் விஜய் மாதிரி அஜீத்குமார் அடுத்தடுத்த படங்களில் நடிப்பாரா, அதற்கு இவர் சரிப்பட்டு வருவாரா என்பதே கோலிவுட் வட்டாரத்தின் முக்கிய கேள்வியாக உள்ளது.





