தற்போது 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி நடந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதில் மிக முக்கியமாக நாம் பார்க்கப்போவது, ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம்தான். வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்கள்தான். அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இது, தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு, மோனிகா ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி, கூலி திரைப்படத்திலிருந்து மூன்றாவதாக பவர் ஹவுஸ் பாடல் வெளியாகிறது.
இதேபோல், சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சூழலில் அதனை ஆர்ஜே பாலாஜி இயக்கியிருக்கிறார். ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
லப்பர் பந்து சுவாசிகா, யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதன் சூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தின் டீசரை ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு தயாராகி வருகிறது. வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் இதன் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் சூர்யா வெங்கி அட்லூரி திரைப்படத்திற்கான அடுத்த கட்ட அப்டேட்டும் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். இதுபோக தனுஷ் நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படத்திலிருந்து முதல் பாடல் இந்த வாரம் வெளியாகிறது. 27ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் பாடல் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.





