தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த விமர்சனத்தை இந்த திரைப்படம் பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே கூலி பெற்றது.
முக்கியமாக திரைப்படத்தில் லாஜிக்கே இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர். முதல் பாதி ஓரளவு நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி திரைக்கதை தேங்கி விட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அனிருத்தின் இசையே படத்தை தூக்கி நிறுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
அதேசமயம் இணையத்தில் கூலி திரைப்படம் கிண்டல் செய்யப்பட்டது. பலரும் காரணமே இல்லாமல் அந்த திரைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களை பரப்பியதாக கூறப்பட்டது. சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து கூலி திரைப்படத்திற்கும் திட்டமிட்டே நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக பேச்சு எழுந்தது.
அதே சமயம் ரஜினிகாந்த் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். ஒட்டுமொத்தமாக படத்தில் அவரது பெர்பார்மன்ஸ் பயங்கரமாக இருந்தது என்றும், ரஜினியின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியதாகவும் கூறிவந்தனர். இதுபோக சோபின் சாஹிர் நடிப்பும் சொல்லிக் கொள்ளும் வகையில் அமைந்ததாகவும், பிரமாதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்ததாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர்.
கூலி திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 151 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு நாட்களில் அந்த திரைப்படம் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதனை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடினர்.
ஆனால் அந்த நான்கு நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் ஏறவே இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு சுத்தமாக வரவேற்பே இல்லை என்று பேசப்படுகிறது. இப்படியான சூழலில் 10 நாட்களில் கூலி திரைப்படம் 465 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. போகிற போக்கில் பார்த்தால் 500 கோடி ரூபாய் வசூல் செய்வது என்பது கடினம்தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





