சினிமாவில் ஏற்படும் பிரச்னைகள், தொழிலாளர் நலன் மற்றும் துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் பொதுச் செயலாளராக நடிகர் விஷால் பொருளாராக நடிகர் கார்த்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன் சங்கத்தின் தலைவராக எம்ஜிஆர் சிவாஜி கணேசன் எஸ்எஸ்ஆர் மற்றும் விஜயகாந்த் ராதாரவி போன்ற நடிகர்கள் இருந்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்கத் தலைவராக நடிகர் நாசர் பொதுச் செயலாளராக நடிகர் விஷால் பொருளாளராக நடிகர் கார்த்தி துணை தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும்பணி நடந்து வருவதாக கூறி நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் செல்லாது, இது சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில் நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது. புதிய நிர்வாகிகள் கட்டுமான பணிகளை தொடர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்துக்கும் விரோதமானது.
நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி ஆகியோர் வரும் ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





