தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். சீனியர் நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். இவர் தற்போது டைரக்சன் செய்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, அவரது முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். கடந்த 11ம் தேதி மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் வெளியானது. படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் இல்லை. அடல்ட் கண்டென்ட் நிறைந்த இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலை வனிதா விஜயகுமார் பயன்படுத்தியிருந்தார். இது மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இளையராஜா இசையில் கமலும் ரூபிணியும் இணைந்து நடனமாடிய ஒரு பாடல் காட்சியாகும்.
தன்னிடம் அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நடிகர் கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான் இசையமைத்த சிவராத்திரி என்ற பாடலை என் அனுமதியின்றி மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் விளம்பரத்திலும் என் பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இளையராஜா கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த பாடலை பயன்படுத்த பாடல் மீது உரிமை பெற்றுள்ள சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திரைப்படம் வெளியாகி விட்டது. இந்த நிலையில் தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் இழப்பீடு பெறலாம். இதுகுறித்து வனிதா தரப்பு பதில் அனுப்ப, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.





