கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அந்த காலகட்டத்தில் அரசியல் போலீஸ் சட்டம் ஒழுங்கு நீதித்துறை என சமுதாயம் சார்ந்த புரட்சி கருத்துள்ள படங்களை இயக்கியவர். அதனால் அவரது படங்கள் என்றாலே காட்சிகளிலும், வசனங்களிலும் தீப்பொறி பறக்கும்.
ரஜினிகாந்த் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவர் தனது விஜயை வைத்து அவரை நாயகனாக அறிமுகப்படுத்திய முதல் படம் நாளைய தீர்ப்பு. கடந்த 1992ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துடன் விஜயை நடிக்க வைத்திருந்தார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த நடிகர் விஜய், இன்று தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்ற நிலையில் அவர் அரசியல் களத்தில் நிற்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜயின் அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியதாவது, 1992ம் ஆண்டில் விஜய் நடிகராக வந்த போது, டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் மகன், ஏதோ படம் பண்ணியிருக்காராம். பார்ப்போமே என்று சொன்னார்கள். அப்படித்தானே அப்போது இருந்தது.
ஆனால் இப்போது என்னை தளபதியின் அப்பா என்று சொல்கிறார்கள். இந்த பெயரை எனக்கு வாங்கி கொடுத்தது சாதாரண விஷயமில்லை. நான் வெளியே எங்காவது போனால், விஜயோட அப்பா போகிறார், விஜயோட அப்பா போகிறார் என்றுதான் என்னை சொல்கிறார்கள்.
விஜயோட அப்பா என்பது எனக்கு ஒரு பெருமைதானே, எல்லா பிள்ளையும் அந்த பெருமையை தாய் தகப்பனுக்கு வாங்கி கொடுக்கறது இல்லையே என்று அந்த நேர்காணலில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய் குறித்து பெருமையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





