தமிழ் சினிமாவில் இயக்குனர் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திரிபவர் சி எஸ் அமுதன். 2000 ஆண்டுகளிலேயே திரைத்துறைக்கு வந்த இவர், முதலில் தன்னை பாடலாசிரியராக அடையாளப்படுத்திக் கொண்டார். மின்னலே திரைப்படத்தில் இருந்த மேடி பாடல் இவர் எழுதியது தான்.
திரைத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பரிபுரிந்த இவருக்கு, முதல்முறையாக இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிவாவை வைத்து, தமிழ் படம் என்னும் பெருங்காவியத்தை எடுத்தார் சிஎஸ் அமுதன். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகாத புதிய ஜானரை தொட்ட தமிழ் படம், ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என அனைவரது காலம் தொட்டு இருக்கும் தமிழ் சினிமாவை, தனது ஒரே ஒரு திரைப்படத்தில் வைத்து முழுக்க முழுக்க கிண்டலடித்தார் இயக்குனர் சி எஸ் அமுதன்.
சினிமா பட்டி என்னும் ஒரே ஒரு ஊரை காண்பித்து கருத்தம்மா திரைப்படம் தொடங்கி, ஒவ்வொரு திரைப்படத்தின் காட்சியையும் வைத்து செய்தார். இதை எடுத்து தனது இரண்டாவது படத்திற்கு, இரண்டாவது படம் என்றே பெயர் வைத்தார் சிஎஸ் அமுதன். விமல் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வரை திரைப்படம் மட்டும் வெளியாகாமல் உள்ளது.
இதன் பிறகு மீண்டும் தமிழ் படம் படத்தின் இரண்டாம் பாகத்தை அமுதன் கையில் எடுத்தார். முந்தைய திரைப்படத்தின் போலவே இதுவும் ஸ்பூப் வகையாக இருந்தாலும், அது ரசிகர்களிடம் எடுபடாமல் போனதால் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனால் தனது ரூட்டை மாற்றி இருக்கும் அமுதன், முதல் முறையாக சீரியஸ் டோனில் படம் எடுத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரத்தம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில், வரும் ஆறாம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கான பிரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள பட குழு ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் படம் 2-வில் வில்லனாக நடித்த சதீஷ், அதே கெட்டப்பில் இதிலும் வருகிறார். இதை பார்த்து விஜய் ஆண்டனி என்ன என்று கேட்க, இது அமுதனின் சினிமாடிக் யுனிவர்ஸ் என்று கூறுகிறார். லோகேஷ் கனகராஜை வம்பு இழுத்திருக்கும் இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.





