தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகர்களாக அசத்தியவர்கள் நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி. விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி ஷோவில் நடித்துக்கொண்டிருந்த சந்தானத்தை நடிகர் சிம்பு சினிமாவுக்குள் அழைத்து வந்தார். மன்மதன் வல்லவன் ஒஸ்தி போன்ற படங்கள் சந்தானத்துக்கு நல்ல காமெடியன் அடையாளத்தை கொடுத்தது.
அதே போல் கண்ணன் வருவான் வின்னர் தீபாவளி காதல் போன்ற படங்களில் சில காட்சிகளில் நடித்த சூரிக்கு, வெண்ணிலா கபடிக்குழு படம் பெரிய வரவேற்பை அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. பரோட்டா சாப்பிடும் பந்தயத்தில் நடிகர் சூரியின் நடிப்பு ரசிகர்களை வென்றுவிட்டது.
காமெடி நடிப்பில் அசத்திக்கொண்டிருந்த சந்தானம் சூரி இருவருமே ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறிவிட்டனர். முதலில் சந்தானம் ஹீரோவாக மாறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம்தான் அவர் நாயகனாக அறிமுகமான படம். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து காமெடி கலந்த ஹீரோ கேரக்டரில் சந்தானம் அசத்தினார்.
ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி, அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட காமெடி இல்லாமல் நடித்து அசத்தினார். தொடர்ந்து விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களில் நடித்த சூரி இப்போது மாமன் என்ற படத்தில் நடித்து அந்த படம் நேற்று வெளியானது. இந்த படத்தின் கதை ஆசிரியர் சூரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகர்கள் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரி நடித்த மாமன் படமும் நேற்று 16ம் தேதி ஒரே நாளில் வெளியானது. மாஜி காமெடி நடிகர்களாக இருந்த அவர்கள், ஹீரோக்களாக இமேஜ் உயர்ந்த நிலையில் முதன் முறையாக நேரடியாக நேற்று இந்த படங்கள் மூலமாக மோதிக்கொண்டனர்.
இந்த சூழலில் நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ. 3.5 கோடி வசூலை தந்துள்ளது. பேமிலி சென்டிமென்ட் என்று விமர்சிக்கப்படும் நிலையில் சூரி நடிப்பில் வெளியான மாமன் படம் ரூ. 2.9 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாள் வசூலில் நடிகர் சூரியை நடிகர் சந்தானம் முந்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





