ஒரு திரைப்படம் உருவாக முதுகெலும்பாக இருப்பது தயாரிப்பாளர்தான். இயக்குனர் என்னதான் கதை எழுதியிருந்தாலும் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என டாப் ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் அந்த படம் திரையில் வர காரணமாக இருப்பவர் தயாரிப்பாளர்தான். அவர்தான் 300 கோடி ரூபாய் 500 கோடி ரூபாய் என முதலீடு செய்த அந்த படத்தை தயாரிக்கிறார்.
கடந்த 10 15 ஆண்டுகளில் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இப்போது 5வது படத்தில் நடிக்க போகும் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் சம்பளம் ரூ. 50 கோடி என்கின்றனர். அடுத்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 75 கோடி என்கின்றனர். ரஜினி கமல் சம்பளம் எல்லாம் 150 கோடி ரூபாயை கடந்துவிட்டது.
இதில் அதிகபட்சமாக நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ. 275 கோடி என்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்குமார் தனக்கு சம்பளமாக ரூ. 185 கோடி கேட்பதால்தான் அவரது ஏகே 64 படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வராத நிலையில் அந்த படம் இன்னும் துவங்கப்படாமல் முடங்கி போயுள்ளது.
இப்படி படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியை ஹீரோக்களுக்கு சம்பளமாக போய்விடுகிறது. இதில் சில ஹீரோக்கள் படம் துவங்கும் போதே மொத்த சம்பளத்தையும் கேட்கின்றனர். இன்னும் சிலர் பாதியாவது வாங்கி விடுகின்றனர். அதிக வட்டிக்கு பணம் வாங்கி படத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் கடைசியில் படம் ஓடாமல் போனால் பெரிய நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
அதனால் இனிமேல் ஹீரோக்களுக்கு சம்பளம் என்று தனியாக கிடையாது. படம் வெளியாகி வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் தரப்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருக்கிறது. ஆனால் இதை தென்னிந்திய நடிகர் சங்கம் மறுத்து வருகிறது. இந்த சூழலில்தான் வருகிற மே 2ம் தேதி தயாரிப்பாளர் சங்கம் ஒரு நாள் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளது.
நடிகர்களை பொருத்த வரை படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அந்த படத்தில் நடித்ததற்காக கணிசமான சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒதுங்கி விடுகின்றனர். ஒரு படம் படுதோல்வி அடைந்தாலும் அடுத்த படத்தில் கமிட் ஆகி நடிக்க போய்விடுகின்றனர். ஆனால் பலத்த நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் கடனாளியாகி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுகிறார். எனவே தயாரிப்பாளர் நலனுக்காக தெலுங்கு சினிமாவை போல தமிழ் சினிமாவிலும் இந்த பிராபர்டி ஷேர் முறையை செயல்படுத்துவதே நல்லது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





