கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரளா சல்சித்ரா அகாடமி ஒருங்கிணைப்பில் கடந்த 12ம் தேதி சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. வருகிற 19ம் தேதி வரை 8 நாட்களுக்கு இந்த திரைப்பட விழா நடைபெற உள்ளது, இதில் முக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நடிகர் நடிகைகள் சினிமா விமர்சகர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்று உள்ளனர்.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 19 படங்களை விழாக்குழு தேர்வு செய்திருந்தது. ஆனால் இந்த படங்களை திரையிடுவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்தது. பின்னர் பீஃப், ஈகல்ஸ் ஆஃப் ரி பப்ளிக், ஹார்ட் ஆஃப் தி வுஃல்ப், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காஸா போன்ற 4 படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டது.
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விழாக்குழு தரப்பில் தேர்வான படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை, மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கவில்லை. இதனால் விழாக்குழு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது மத்திய அரசின் தடையை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் அனுமதி கிடைக்காத சுமார் 15 படங்களை திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திட்டமிட்டபடி திரையிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கேரளா சல்சித்ரா அகாடமி தலைவர் ரசூல் பூக்குட்டி இன்று அறிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆளும் இடதுசாரி அரசின் ஆதரவைத் தொடர்ந்து திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான பாலஸ்தீன விவகாரம் குறித்த படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இத்துடன் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலில் மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குனர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் நூறாண்டுகள் பழமையான பேட்டில்ஷிப் பொட்டெம்கின் என்னும் திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள நிலையில் அந்த படங்களை காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.





