போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் அந்த படத்தில் நாயகியாக அறிமுகமானார். விடிவி கணேஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், இப்போது லைக் என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
கோமாளி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்து ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார்.
கடந்த மாதம் 21ம் தேதி வெளியான டிராகன் படம் 25 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்த மாஸ் ஹிட் படமாக மாறிவிட்டது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். அதே போல் நடிகர் விஜயும் டிராகன் படக்குழுவினரை நேரில் வரவழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் எல்ஐகே என்ற லைக் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு முதலில் எல்ஐசி என டைட்டில் வைக்கப்பட்டு பிறகு லைக் என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் திட்டமிட்ட பட்ஜெட்டை விட மிகவும் அதிகம் செலவு செய்ததால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் அவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை உள்ளது.
இப்போது லைக் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிய நிலையில், தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு டிமாண்ட் செய்திருக்கிறார். ரூ. 5 கோடி பட்ஜெட்டில் நாயகன், நாயகி பங்கேற்கும் ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே தயாரிப்பு செலவு கைமீறிப் போன நிலையில், அப்செட் ஆக உள்ள தயாரிப்பாளர், இயக்குனரின் இந்த புதிய டிமாண்ட் காரணமாக மேலும் மன உளைச்சல் ஏற்பட்டு தவிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





