சினிமா, அரசியல், விளையாட்டு, தொழில் என எந்த துறையாக இருந்தாலும் முன்னணி இடத்தை பிடிப்பதுதான் ஒவ்வொரு மனிதரின் நோக்கமாக இருக்கிறது. ஒருவர் அடைந்த இடத்தை பதவியில், பொறுப்பில், செல்வாக்கில் அடைய நினைப்பதுதான் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. அதுதான் வெற்றியாக கருதப்படுகிறது.
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என்று பஞ்சாயத்து பேசும் அளவுக்கு சினிமாவில், புகழில், பெயரில் பெரிய செல்வாக்கை ரசிகர்களிடம் பெற்றவர். இப்போது அடுத்தக்கட்டமாக தமிழக முதல்வர் பதவியை அடையும் நோக்கத்தில் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியிருக்கிறார்.
ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் விஜய், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில் அரசியலில் குதித்திருப்பதாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்டோர் விஜய் கட்சியில் இணைய விரும்புவதாக கூறி வருகின்றனர்.
விஜய், அரசியலுக்கு செல்வதால் இனி விஜய் இடத்தை பிடிக்கப் போவது யார் என்று கோலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது. இதில் சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி ஆகிய 5 பேரில் விஜய் இடத்தை பிடிக்கப் போவது சிவகார்த்திகேயன்தான் என்றும் ஒரு தரப்பில் தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், விஜய் இடத்துக்கு நடிகர் சூர்யா வருவது சாத்தியமா என்பது குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி சமீபத்தில் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், நடிகர் விஜயை பொருத்த வரை, ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது அந்த படத்தின் கதையை கேட்பார். அப்போது அவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பார். பிறகு அந்த படத்துக்கு ஓகே சொல்லி விட்டால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நடிக்க வந்து விடுவார்.
அதன்பிறகு அந்த படம் குறித்தும், எடுக்கப்படும் காட்சிகள் குறித்தும் இயக்குனரிடம் எதுவுமே கேட்க மாட்டார். படத்தில் நடித்து கொடுத்து முடித்து விடுவார். ஆனால் சூர்யா, படப்பிடிப்புக்கு வந்துவிட்டு டைரக்டரிடம் கேள்வி, சந்தேகம் கேட்பார். கதையில் மாற்றம், திருத்தம் சொல்வார். அதனால்தான், புறநானூறு படமே நின்று போனது. முதலில் விஜய் போல, டைரக்ஷனில் குறுக்கிடாத நல்ல பழக்கத்தை சூர்யா கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் அவரை போல நல்ல பெயரை பெற முடியும் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.





