ஆந்திராவில் துணை முதல்வராக இருப்பவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் அவர் ஒரு முன்னணி நடிகராகவும் இருக்கிறார். நடிகர் சிரஞ்சீவியின் சொந்த சகோதரர். நடிகர் ராம்சரணுக்கு சித்தப்பா ஆகிறார். நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து சரியாக போணி ஆகாத நிலையில் அவரது தம்பி பவன் கல்யாண் இப்போது துணை முதல்வராக இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பாஜக சார்பில் நடந்த முருகன் பக்தி மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துக்கொண்டார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திருத்தணி மற்றும் பழனி போன்ற கோவில்களுக்கும் அவர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நடிகர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று 2 வாரங்களாக ஆட்சி நடத்தி வருகிறார். 107 இடங்களில் மட்டுமே அவர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் தந்த ஆதரவில் ஆட்சியமைத்து உள்ளார்.
அதே நேரத்தில் அந்த கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய அமைச்சர் பதவிகளை தந்து முதல்வர் விஜய் ஆட்சியில் பங்கு தந்துள்ளார். அதனால் 5 ஆண்டுகளுக்கு அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சமூக வலைதளங்களின் ஆதரவால் ஆட்சிக்கு வந்தவர் என்ற விமர்சனமும் முதல்வர் விஜய் மீது இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது, 15 ஆண்டுகளாக போராடியும் என்னால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் போஸ்டர் ஒட்டியே முதல்வராகிறார்கள். கட் அவுட் வைத்தே ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ரொம்ப சுலபம் போல. போஸ்டர்கள் ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விடுகிறார்கள். தமிழக அரசியலை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அந்த விழாவில் கிண்டலாக பேசியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களை எரிச்சலடைய செய்திருக்கிறது.





